மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கனவாய், கருவாய் மணல் வீடாய் கட்டப்பட்டிருந்த நமது சாதனா இன்று தன் முதல் சுவாசத்தை சுவாசிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான் பெயர் வைப்பாங்க. ஆனா நாம கொஞ்சம் வித்தியாசமா பெயர் வெச்சதுக்கு அப்புறம் தான் குழந்தையே பிறந்திருக்கு. வித்தியாசப் பட்டிருப்பது ஒன்னும் SMILEக்கு புதுசில்லையே !!
" கல்விக் கரையில - கற்பவர் நாள் சில" இது சாதனாவுக்கு மிகவும் பொருந்தும். இங்கு படிக்கணும்னு நினைபவர்களுக்கு கட்டுப்பாடே கிடையாது. அதனால் இனிமேல் "சாதனாவின் கரையில - கற்பவர் நாள் சில-ன்னு " சொல்கிற நாள் தொலைவில் இல்லை. கல்விக்காக குரல் கொடுத்த அண்ணா , காந்தி , பாரதி , எம் ஜி ஆர்-னு எல்லோரும் அணிவகுத்து நிற்கிற மெரினா கடற்கரையில் தான் சாதனாவின் முதல் சுவாசம். இது சாதனாவின் பெருமையா....இல்லை கர்வமா....இல்லை காலம் தான் விசித்திரமான பாஷையில் சாதனாவிற்கு ஏதாவது சொல்ல வருகிறதா .... தெரியலை .....
இதுக்கு மேல நம்ம மாணவர்களுக்கு வழிகாட்டியா திருவள்ளுவரே சிலையா நின்னு "இங்கு கல்வி இலவசம்" ன்னு SMILE-க்கு கை காட்டுறாரு ஆடிட்டோரியம் நோக்கி...
ஆகஸ்ட்4ல் - SMILE Calender ல யாருமே கிழிக்க முடியாத தினம். ஒரே இடத்தில் இவ்வளவு பிரசவமான்னு ஆச்சர்யம். அத்தனை கண்ணீர், மகிழ்ச்சி, ஏக்கம், உற்சாகம், வேகம், திறமை. இறந்தகால கஷ்டத்துமேல ஏறி நின்னு நிகழ்காலத்த அனுபவிச்சு எதிர்காலத்த பிடிக்க நினைக்கிற நம்ம பசங்க எல்லோரும் ஆஜர். ஒரு சிலர் தவிர . எல்லோரும் வந்திருந்தா கண்டிப்பா திருஷ்டி பட்டிருக்கும். பெற்றோர்களும் வந்து அவங்க பாரத்த நம்ம கிட்ட தந்துட்டு நம்ம புன்னககையை வாங்கிகிட்டுப் போனதில் கூடுதல் சந்தோசம். "ரொம்ப குளிருதுல்ல " ன்னு ஒரு பெற்றோர் சொல்ல. "இத்தனை மனசு ஒரே நேரத்தில் குளிர்ந்து போச்சில்லே.. அது தான் இப்படி இருக்கு" ன்னு மற்றோர் பெற்றோர் சொல்ல நாமும் சற்றே அசந்து போனோம்... SMILE உனக்கு கோடி நன்றிகள்.
வழக்கமாக வரவேற்புரையுடன் துவங்க வேண்டிய விழா, சற்றே வித்தியாசமாக ஒரு மாணவியின் முகவரியுடன் துடங்கியது. "Hi, I am Hemavathy"ன்னு தன் கல்லூரியைப் பற்றி பேசினால். இங்கே வரவேற்புரை எல்லாம் எதற்கு! நம்மை நாமே வரவேற்பதா? இருந்தும் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திய பின்னர் நாம் வரவேற்றது, நம்பிக்கை, கனவு, ஆர்வம், முயற்சி, நேர்மை, கடமை, போன்ற நம் வெற்றிக்கான படிகளைதான்.
" நான் நல்லா படிப்பேன்...படிச்சிடுவேன்...ஜெயிப்பேன்...ஜெயிசுடுவேன்...ன்னு வார்த்தை தடுமாறி நோக்கம் தடுமாறாதவனாய் ஒரு மாணவன்.
"நான் என்னாலான எல்லா உதவியும் SMILEக்கு செய்வேன்" னு நம்ம டாக்டரும் , SMILE மாதிரி நானும் ஒரு அமைப்பு ஆரம்பிச்சு உதவனும், எல்லோரையும் படிக்க வைக்கணும் " ன்னு நம்ம Engineer-ம் , SMILE க்கு தங்கள் நன்றியைச் சொல்லி தங்கள் கனவை மைக்கில் படம் பிடித்து காட்டினார்கள்.
"இந்த முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்"னு தேர்வு ஆகாத லோகாம்பாள் கடிதம் போட்டது நமக்கு ஆச்சர்யம். போனில் , "SMILEன் முயற்சிக்கு தலை வணங்கும். உன் கனவை நனவாக்க SMILE உதவும்"னு சொன்னது அவளுக்கே ஆச்சர்யம் என்பதை அவளே சொன்னால் கலங்கிய கண்களோடு.
இப்படி ஆரவாரமாய் போன நிகழ்ச்சி ஒரு மாணவனுக்கு ஒரு mentor என நிர்ணயித்து முடித்தது. மேலும் இனி வரும் சந்தோஷங்களை சேகரிக்க ஒரு Bag உம்,தனது தலையெழுத்தை தாமே எழுதிக்கொள்ள நோட்டும் பேனாவும் தருகிறார்களா என்ற கேள்வி எல்லோருக்கும் வந்திருக்கும் SMILE Kit ஐ பார்த்து.
"எங்க பசங்கள படிக்க வைக்க மாட்டீங்களா? அதுக்கு நாங்க என்ன பண்ணனும்" னு அங்கே வேலை செய்யும் பெண்கள் கேட்கும் போது SMILE தன் கடமையை நன்றாகவே புரிந்து கொண்டது.
இந்த துவக்கத்தை வழி நடத்தி செல்லப் போவது யார்??
நமது இணைந்த கைகள் மட்டுமே!!!
நம்பிக்கையுடன்
SMILE
No comments:
Post a Comment